உபரிநீர் வெளியேற்றம் குறைப்பால் ஈரோடு காவிரி கரையில் வெள்ளம் வடிய துவங்கியது: முகாம்களில் இருந்து மக்கள் வீடு திரும்பினர்

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வடிய துவங்கியுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதையடுத்து உபரி நீர், காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய காவிரி கரையோரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். மாவட்டம் முழுவதும் 77 முகாம்கள் அமைக்கப்பட்டு 167 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி காலை மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 8 மணிக்கு உபரிநீர் வெளியேற்றம் 70 ஆயிரம் கனடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 70 ஆயிரம் கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டது குறிப்படத்தக்கது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக காவிரியில் நீடித்து வந்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறையத்தொடங்கியதால் கரையோர வீடுகளில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய துவங்கியது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அவர்களது குடியிருப்புகளுக்கு செல்ல தொடங்கினர். மேலும், ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றங்கரையில் நீரில் மூழ்கியிருந்த மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் நீர் வடிந்து வெளியே தெரிய துவங்கியது. அதேபோல், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள், கற்கள், மண் குவியல்கள் கரையோரத்தில் தேங்கி காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உபரிநீர் வெளியேற்றம் குறைப்பால் ஈரோடு காவிரி கரையில் வெள்ளம் வடிய துவங்கியது: முகாம்களில் இருந்து மக்கள் வீடு திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: