யானை கூட்டம் ஒன்று மருதமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் புகுந்து அங்கிருந்த பழக்கடைகளை சூறையாடி சென்றன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து மருதமலை கோயில் பகுதியில் நடந்து வருகிறது. பக்தர்கள் அதிகம் இருக்கும் பகல் மற்றும் மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், மாலை நேரத்தில் மலைப்பாதையில் டூவிலரில் செல்பவர்கள் யானைகள் நடமாட்டத்தை இளைஞர்கள் சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மருதமலை பகுதியில் இரண்டு யானைகள் கூட்டம் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதில் ஒரு யானை கூட்டத்தில் குட்டியுடன் கூடிய 9 யானைகள் இருப்பதாகவும், மற்றொரு யானை கூட்டத்தில் 6 முதல் 7 யானைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இவை தவிர, ஒற்றை யானைகளும் இருக்கின்றன. இந்த யானை கூட்டம் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரிந்து மருதமலை அடுத்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் யானை கூட்டம், விடிய விடிய குடியிருப்பு பகுதியில் சுற்றி பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தடாகம் பகுதியிலும் யானைகள் கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். மேலும், மருதமலை, சோமையம்பாளையம், தடாகம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், விவசாயிகள், பொதுமக்கள் தகவல் அளித்தும் வனத்துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை இருக்கிறது. நாளுக்கு நாள் யானை நடமாட்டம் மற்றும் அதன் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால், வனத்துறை சார்பில் தற்போது இரவு நேரத்தில் யானை கண்காணிக்கும் பணியில் சிறப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு குழுவில் வனவர், வனக்காப்பாளர் உள்பட 6 பேர் உள்ளனர். இவர்கள், இரவு நேரங்களில் தொடர்ந்து யானைகள் அதிகம் நடமாடும் இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுடன் ஏற்கனவே அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் குழுவும் இணைந்து உள்ளதால், தற்போது மருதமலை சுற்றுவட்டார பகுதியில் கண்காணிப்பு பணியில் 12 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘மருதமலை, சோமையம்பாளையம் பகுதியில் யானை நடமாட்டம் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வனவர் தலைமையில் செயல்படும் இக்குழுவில் 6 பேர் இருப்பர். இவர்கள் அடிக்கடி வனத்தில் இருந்து யானை வெளியேறும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யானைகள் வெளியேறினால், அதனை வனத்திற்குள் அனுப்பி வருகின்றனர். இரவு நேரங்களில் குடியிருப்பு, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மருதமலை மலைப்பாதையில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் யானை நடமாட்டம் குறித்து தெரியவந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகளை விரட்ட முயற்சி செய்யவோ, அதனை துன்புறுத்தவோ வேண்டாம்’’ என்றனர்.
The post மருதமலை பகுதியில் நடமாட்டம் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு appeared first on Dinakaran.