மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 

மேட்டுப்பாளையம், ஆக.5: ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தும், அவர்களுக்கு பிடித்த உணவு பண்டங்களை படைத்து படையலிட்டு வழிபட்டால் முன்னோர்களின் ஆசி குடும்பத்தினருக்கு கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நேற்று மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் அதிகாலை முதலே கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னதாக பவானி ஆற்றில் புனித நீராடி புரோகிதர்கள் முன்னிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களுக்கு பிடித்த உணவு பண்டங்களை படைத்து படையலிட்டு பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இந்து சமுதாய நந்தவன நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Related Stories: