நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் அறிவிப்பு: சைக்கிளில் சென்று தாயிடம் ஆசி பெற்றார்

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளரை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே சுமுக உறவு இல்லாததால், மாநகராட்சி கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 3ம் தேதி மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ பொறுப்பு மேயராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி புதிய மேயர் தேர்வு இன்று (5ம் தேதி) மாநகராட்சி மைய மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி, நெல்லை வண்ணார்பேட்டை தனியார் ஓட்டலில் புதிய மேயர் குறித்த திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி மேயர் வேட்பாளராக 25வது வார்டு உறுப்பினர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் அறிவித்தனர். அதற்கான கடிதத்தை கவுன்சிலர்கள் முன்னிலையில் அவர்கள் படித்து காட்டினர். தொடர்ந்து, மேயர் வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் அறிமுகம் செய்தனர். மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வழக்கமாக சைக்கிளில்தான் எங்கும் செல்வார். ஆலோசனை கூட்டம் நடந்த ஓட்டலுக்கும் சைக்கிளில்தான் வந்தார். கூட்டம் முடிந்ததும் தனது வீட்டிற்கு சைக்கிளிலேயே சென்று தாய் மரகதத்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

The post நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் அறிவிப்பு: சைக்கிளில் சென்று தாயிடம் ஆசி பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: