×

வயநாடு நிலச்சரிவு துயர் துடைக்க 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: வயநாடு நிலச்சரிவு துயர் துடைக்க, 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றனர் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. இவர்களது துயர் துடைக்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளமை பருவத்தில் பொறியாளர் படிப்பு படித்து சென்னையில் பயிற்சி பெற்று ராணுவ பொறியாளராக பணியில் சேர்ந்த சீதா ஷெல்கே என்பவர் வயநாடு பகுதியில் சூரல்மலை பகுதியில் 144 ராணுவ வீரர்களுடன் 36 மணி நேரத்தில் இரும்பு பாலம் அமைத்து நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற மகத்தான சாதனை புரிந்தது மிகுந்த வரவேற்புக்குரியது. அவரை பாராட்டுகிறோம். அதேபோன்று, கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப்லைன் கம்பி மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் செவிலியர் சபீனா முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இவரது துணிச்சலான பணியை தமிழக காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வயநாடு நிலச்சரிவு துயர் துடைக்க 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 18 ,Congress ,Wayanad ,Chennai ,Selvaperundagai ,Tamil Nadu ,President ,Selvaperunthakai ,Kerala ,Wayanad District ,
× RELATED ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம்...