- தாம்பரம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்
- அருண்ராஜ்
- செங்கல்பட்டு மாவட்டம்…
- தின மலர்
செங்கல்பட்டு, ஆக. 3: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தாம்பரத்தில் குடிமைப்பணி மற்றும் மத்திய அரசுப் பணிக்கு பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும், என்றும், இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வனக்கோட்டம் விரிவாக்க மையத்தினை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலாத் துறை ஆணையர் சமயமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு கீழ் பள்ளி கல்லூரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் தான்றி மரம், நீர்மத்தி, நாவல் போன்ற மர வகைகளை மருத்துவமனை வளாகம், பள்ளி கல்வி நிலையங்கள், ஐடிஐ நிறுவனங்கள் போன்ற இடங்களில் மரங்களை நட்டு வளர்க்கலாம். விதை பண்ணைகளில் இருந்து வேங்கை, செம்மரம் போன்ற மரங்களை திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து பெற்று நடலாம் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அம்மா உணவகத்தில் பொருட்கள் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு, மதிய உணவிற்காக சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் தயாரிப்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி வழங்கும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார். பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன உயர் ரக மற்றும் தீவிர சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்தார்.
குழந்தை பிறந்து தாய்மார்கள் வீட்டிற்கு சென்ற பிறகு மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்கு வருகின்றனரா? மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி போன்று காரணங்களால் மருத்துவமனைக்கு வருகிறார்களா? எனவும் கேட்டறிந்து, மருத்துவ காப்பீடு அட்டை மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். பின்னர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பிரிவினை பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஆய்வு செய்தார்.
அப்போது, ஐ.ஏ.எஸ்., நீட் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்கள் பெற்று வழங்கலாம் என்றும், குழந்தைகளுக்கு ஏற்றார்போல் புத்தகங்களை வைத்திடவும், நூலகத்தை சுற்றி கொசு வலைகள் அமைக்கவும், இணையதள வசதி அமைத்திடவும் அறிவுறுத்தினார். மேலும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்டு பயிற்சி வழங்க வேண்டும். வாட்ஸ் அப் குழு உருவாக்கி பயிற்சி வகுப்பினை தொடங்குமாறும் அறிவுறுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் மாவட்ட நிர்வாகமே அமைத்து தந்துள்ளது. அதனை மாணவர்கள் படித்து பயன்பெற வேண்டும்’ என்றார்.
இதே போன்று தாம்பரம் பகுதியில் குடிமைப்பணி, மத்திய அரசு பணிக்கு பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிர்வாகத்தினால் நடத்திட ஏற்பாடு செய்யப்படும் எனவும், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த பயிற்சி மையத்தில் தற்போது வரை 7 மாணவர்கள் இணைந்துள்ளனர். செங்கல்பட்டு அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற 140 மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி வழங்கினார். அப்போது, போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மைமிங் நாடகம் வாயிலாக மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவேடு, வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டு, கேமரா பழுது நீக்கம் செய்து நல்ல நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, கைதிகள் அறையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், வன அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தாம்பரத்தில் மத்திய அரசு பணிக்கு பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.