×

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக சென்று வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி தொடக்கம் : கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக சென்று வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025ன்படி, முதல் கட்டமாக, கடந்த 20ம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி வரும் அக்டோபர் 18ம் தேதிவரை நடைபெறுகிறது. இதையடுத்து, அக்டோபர் 29ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்களில் வெளியிடப்படுகிறது.

தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து மேற்குறிப்பிட்ட அலுவலகங்களிலோ அல்லது தங்களின் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில், சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். அதில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வுக்கு டிசம்பர் 24ம் தேதி காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. பின்னர், வரும் 2025ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும்போது பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகவரிச்சான்றாக நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு, ஆதார் அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், விவசாய அடையாள அட்டை, வாடகைக் குத்தகைப் பத்திரம், வீடு விற்பனைப் பத்திரம் ஆகியவற்றில் ஏதெனுமொன்றை ஆதாரமாக அளிக்கலாம். எனவே, இவ்வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று கலெக்டர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக சென்று வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி தொடக்கம் : கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District ,Chengalpattu ,Collector ,Arunraj ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...