பிஇ சேர்க்கை முதல் சுற்றில் 24 ஆயிரம் பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு


சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் முதல் சுற்றில் முதற்கட்டமாக 24 ஆயிரம் மாணவ மாணவியருக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளaதாக பொறியியல் சேர்க்கை கவுன்சில் தெரிவித்துள்ளது. பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் 2024-2025ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த வாரம் தொடங்கியது. விண்ணப்பித்த மாணவ மாணவியருக்கு ஆன்லைன் மூலம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கான கவுன்சலிங் முடிந்து தற்போது பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, பாடப்பிரிவு(Academic) அடிப்படையில் விண்ணப்பித்து இருந்தவர்களில் 26 ஆயிரத்து 678 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 22 ஆயிரத்து 699 பேர் தாங்கள் விரும்பிய கல்லூரிகள் குறித்து பதிவு செய்து இருந்தனர்.

அதன் பேரில் 21 ஆயிரத்து 408 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களில் 1406 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1250 பேர் தாங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்து இருந்த நிலையில், 1241 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பாடப் பிரிவின் கீழ் விண்ணப்பித்து 2272 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 1529 பேர் தங்கள் விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 1334 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து 469 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 244 பேர் விருப்பத்தெரிவை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 194 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்களின் படி மொத்தம் 24 ஆயிரத்து 177 பேர் தற்காலிகமாக கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை பெற்றுள்ளார்கள். இதையடுத்து, மேற்கண்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதி செய்யாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு தானாக ரத்தாகிவிடும் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சில் தெரிவித்துள்ளது.

The post பிஇ சேர்க்கை முதல் சுற்றில் 24 ஆயிரம் பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: