மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: அரசு உத்தரவு


சென்னை: மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணி மேற்கொள்ளவும் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்திற்கு ஜெய முரளிதரன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சி.விஜயராஜ்குமார், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவிந்த், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மதுமதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வீரராகவ ராவ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தர்மேந்திர பரிதமாப், திருப்பூர் மாவட்டத்திற்கு வள்ளலார், கோவை மாவட்டத்திற்கு நந்தகுமார், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுந்தரவல்லி, நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மகேஸ்வரன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இயற்கை பேரிடர் காலங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு, குடிமராமத்து, தடுப்பு அணைகள் கட்டுதல், கிராம குளங்கள், ஊரணிகள், கோயில் குளங்கள், சிறு பாசன தொட்டிகள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன தொட்டிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை மீட்க ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகளை ஆய்வு செய்வார்கள். இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் தீர்வையும் கணிகாணிப்பு அலுவலர்கள் தருவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: