×

பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு


சென்னை: பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக): தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல மாநிலங்களின் உள் இடஒதுக்கீடு முடிவுகளுக்கு எதிரான 20 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கியது சமத்துவத்திற்கு வழி வகுக்கும். இதன் மூலம் தமிழ்நாட்டில் 2009ம் ஆண்டு முதல்வர் கலைஞர், பட்டியல் இனத்தவரின் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி): அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய கலைஞருக்கும், தமிழ்நாட்டில் இதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட அமைப்புகளுக்கும், இவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்த ஜனநாயக உள்ளம் கொண்டோருக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

ஜவாஹிருல்லா (மமக): பட்டியல் இனத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும். அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை உள்ஒதுக்கீடு மீறவில்லை. உள் இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் பிறப்பித்த சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். சமூக நீதி வரலாற்றில் இது மிக முக்கியமான தீர்ப்பாகும்.

The post பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chennai ,Tamil Nadu ,VAIGO ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...