திருத்தணி அருகே சாக்கடை பாதையில் பைப் லைன் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீரால் வாந்தி, பேதி: 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் எஸ். அக்ரஹாரம் காலனியில் சாக்கடை செல்லும் பாதையில் குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் குடிநீரில் கழிவு நீர் கலந்து வாந்தி, பேதி ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருத்தணி ஒன்றியம் எஸ். அக்ரஹாரம் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் மூலம் கிராமமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் அந்த குடிநீர் குழாய், சாக்கடைக் கால்வாய்க்கு உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனால், பல மாதங்களாக சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தாத நிலையில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் பைப் சாக்கடைக் கால்வாய்க்கு உள்ளே சேதமடைந்து குடிநீருடன் கழிவு நீர் கலந்து விட்டது. அதனால் குடிநீர் பைப் லைனில் வரும் போதெல்லாம் கழிவு நீர் கலந்த குடிநீரையே மக்கள் பிடித்து குடிப்பதற்கும், சமைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 15க்கும் மேற்பட்ட முதியோர், பெண்கள், சிறுவர்களுக்கு கடந்த சில நாட்களாக வாந்தி, பேதி ஏற்பட்டு திருத்தணியில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தற்போது 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குடிநீர் மாதிரி எடுத்துச் சென்று பரிசோதனையில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து புதிய பைப் லைன் அமைக்க சுகாதாரத்துறை சார்பில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் புதிய பைப் லைன்கள் அமைப்பதில் ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணன் மெத்தனமாக செயல்படுவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி பேதி ஏற்பட்டு மூதாட்டி இறந்த நிலையில் 15 பேர் பாதிக்கப்பட்டதாகவும் வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

* அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் நிரம்பி வழியும் செப்டிக் டேங்க்
திருத்தணி அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட உட்புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க கழிப்பிடங்கள் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் உள்ள செப்டிக் டேங்கில் கழிவுகள் முழுமையாக நிரம்பி கடந்த 2 நாட்களாக மருத்துவமனை முன்பு வழிகின்றது.

இங்கு வரும் நோயாளிகள் அவர்களுக்கு துணையாக வருபவர்கள் மற்றும் நோயாளிகளை சந்திக்க வருபவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலையில் தள்ளப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். செப்டிக் டேங்க் நிரம்பி வழிவதால், கொசு தொல்லை அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காலம் கருதி தொற்று நோய் உருவாகும் முன்பு செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருத்தணி அருகே சாக்கடை பாதையில் பைப் லைன் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீரால் வாந்தி, பேதி: 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: