ஆகஸ்ட்-2 பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

தமிழ்நாட்டில் அனைவருக்குமான கல்வியை வழங்குவதில் 37,592 (முப்பத்தி ஏழாயிரத்தி ஐநூற்றி தொன்னூற்று இரண்டு) அரசுப் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது. அதில் 37,312 அரசுப் பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பொறுப்பேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி, தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை குழந்தைகளின் பெற்றோர்களே மேலாண்மை செய்யும் உரிமையை பள்ளி மேலாண்மைக் குழு (smc) அவர்களுக்கு அளிக்கிறது. அதாவது பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடிக் கல்வி கல்வியாளர்கள் இவர்களை உள்ளடக்கியதே பள்ளி மேலாண்மைக் குழு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதிலும் ஒரே நாளில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு (smc) மறுகட்டமைப்புக்கான விழிப்புணர்வு கூட்டங்களில் 23.2 இலட்சம் பெற்றோர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மொத்த பள்ளி மேலாண்மைக் குழுக்களில், 6,83,959 (ஆறு லட்சத்து என்பத்தி மூன்றாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஒன்பது) பெற்றோர்கள், அதன் உறுப்பினர்களாக பங்கேற்று பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து பங்காற்றி வருகின்றனர்.

SMC கூட்டமானது கடந்த இரு ஆண்டுகளில் 16 முறை கூடியுள்ளது. இக்கூட்டங்களின் மூலம் நம் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு, இடைநிற்றலை கண்காணிப்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், சுகாதாரம், பாதுகாப்பு, பள்ளிகளின் உட்கட்டமைப்பு போன்ற பள்ளியின் பல்வேறு தேவைகளை கண்டறிந்து அதை அனைவரும் கலந்தாலோசித்து இயற்றப்பட்ட தீர்மானங்கள் மொத்தம் 3,85,697 – செப்டம்பர் 2022 முதல் ஜூலை 2024 வரை.
பள்ளி மேலாண்மைக் குழுவில் இயற்றப்பபட்டுள்ள தீர்மானங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வண்ணம் மாநில அரசின் தலைமைச் செயலர் தலைமையில் 14 பிற துறைகளை சார்ந்த செயலர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும் (SLMC), ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறைசார்ந்த மாவட்ட தலைமை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், SMC தலைவர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்பின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய 24 பேர் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் (DLMC) அமைக்கப்பட்டுள்ளது.

இயற்றப்பபட்ட தீர்மானங்களுக்கு தீர்வு காணும் வண்ணம் நம் அரசுத்துறையும், பள்ளி மேலாண்மைக் குழுவும் இணைந்து கட்டிடம் பழுதுபார்த்தல் – 5004, மின்சாரம் சார்ந்த தேவைகள் – 1747, புதிய நீர் இணைப்பு – 998, பழுதடைந்ததால் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் – 995, பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுபோன மாணவர்களின் சேர்க்கை நடந்த பள்ளிகள் – 800, பள்ளி வயதில் பள்ளியில் சேராத குழந்தைகளின் சேர்க்கை நடந்த பள்ளிகள் – 592 போன்றவற்றை உள்ளடக்கிய 10,136 தீர்மானங்கள் உட்பட மொத்தம் 92,646 (ஜூலை 2024 வரை) தீர்மானங்களுக்கு/தேவைகளுக்கு, மாவட்ட நிர்வாகம், பள்ளி மேலாண்மைக் குழு, பிற துறைகள் அனைத்தும் இணைந்து தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர்களுக்கான, குழந்தைகளுக்கான சட்டப்பூர்வமான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் அரசுக்குமான இணைப்பை பெற்றோர் செயலி ஏற்படுத்தி வருகிறது . இச்செயலியை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் அதன் விழுதுகளாகிய முன்னாள் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் விதமாக, பள்ளி மேலாண்மைக் குழுக்களில் அவர்களும் இணையவுள்ளனர். முன்னாள் மாணவர்கள் இக்குழுவில் இணைவதன் மூலம் பள்ளி மற்றும் சமூகத்திற்கும் இடையே நல்லதொரு இணைப்பை ஏற்படுத்தி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அரசுப் பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் தோளோடு தோள் நிற்பர். கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகளின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. இவ்வாண்டு நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் நாம் அனைவரும் பங்கேற்று பள்ளிகளில் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வோம்.

வரும் ஆகஸ்ட் – 2 ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில்/அறிமுகக் கூட்டத்தில் பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் கல்வி சார்ந்து செயல்படும் அனைவரும் பங்கேற்று பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவோம்!!! பள்ளிகளை வளப்படுத்துவோம்!!! என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அன்போடு கேட்டுக்கொள்கிறது. நம் பள்ளி!! நம் பெருமை!!

 

The post ஆகஸ்ட்-2 பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: