மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடக்கம்

சேலம், ஆக. 1: மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை, நீரேற்றம் மூலம் 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி நேற்று தொடங்கியது. இதனை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதற்கான நீர் ஆதாராமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து, டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சம்பா, குறுவை மற்றும் தாளடி ஆகிய 3 போக சாகுபடிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

அதேசமயம் காவிரியில் நீர்வரத்து அதிகமாகி, அணையின் முழு நீர் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, உபரி நீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு அணை நிரம்பிய பின்னர் திறக்கப்படும் உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ₹673.88 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, மேட்டூர் அணை 120 அடியினை எட்டும் பொழுது, அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ளநீர் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக 82 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,061.16 ஏக்கர் நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு சோதனை ஓட்டமாக ஒரு ஏரிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் மற்றும் 31 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை, 21 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கடந்த இரு வாரங்களாக அங்கிருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து வரும் உபரிநீர், 16 கண்பால உபரிநீர் போக்கி வழியாக, வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த உபரிநீரைக் கொண்டு சேலம் மாவட்டத்தில் வறண்ட ஏரிகளை நிரப்ப, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று, மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து, மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம், செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 56 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து, திப்பம்பட்டியலிருந்து நீரேற்றம் மூலம் வந்த தண்ணீர், எம்.காளிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு வந்தடைந்தது. அப்போது, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் வடக்கு ெதாகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர். இதன்மூலம் ஏராளமான கிராமங்களில் உள்ள விவசாய பயன்பாடு மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியின்போது, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், சப்-கலெக்டர் பொன்மணி, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தயாளகுமார், மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ராமலிங்கம், சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

The post மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: