மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்: டெல்லியில் ராகுல்காந்தியிடம் மனு

கோபி, ஆக.1: மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என மனிதம் சட்ட உதவி மையம் நிறுவனரும், திராவிடர் கழக மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் சென்னியப்பன், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் மனு அளித்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு குழுவின் சார்பில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

அதன்ஒருபகுதியாக, நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு ஒன்றிய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற மனிதம் சட்ட உதவி மையம் நிறுவனரும், திராவிடர் கழக மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் சென்னியப்பன், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மனு அளித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களை திரும்ப பெற குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட ராகுல்காந்தி, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக தெரிவித்தார். அப்போது, எம்பிக்கள் ஜோதிமணி (கரூர்), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), கோபிநாத் (கிருஷ்ணகிரி), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), சுதா (மயிலாடுதுறை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்: டெல்லியில் ராகுல்காந்தியிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: