ஆசிரியர் போராட்டம் விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்


காரைக்குடி: ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் எமிஸ் (இஎம்ஐஎஸ்) பொறுத்தவரை புதிதாக ஏற்கனவே 7 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு இந்த பணிகளை தராமல் அவர்கள், இந்த பணியை பார்க்க கூறியுள்ளோம். படிப்படியாக மிக விரைவில் இந்த சிரமங்கள் குறைந்துவிடும்.

ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுப்பதை மட்டும் பார்த்துக் கொள்ளும் வகையில் மற்ற பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புக்கு பதிலாக, நல்லொழுக்கம் தொடர்பாக பாடத்திட்டத்தில் புதிதாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. திறக்குறள் என வரும் போது அதனை மட்டும் படிக்காமல் அதனுடன் சேர்ந்த நீதிக்கதையையும் தமிழ் ஆசிரியர் கற்று தரும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும். ஆசிரியர்கள் ஏற்கனவே 210 நாட்கள் என அதிகப்படியாக வேலை பார்த்துக் கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முதன்மை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அவர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளவர்கள், எதிர்ப்பாக உள்ளவர்கள் என அனைவரையும் அழைத்து பேச உள்ளனர். அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடிய முடிவு விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆசிரியர் போராட்டம் விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: