சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்தரநாத் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 11 தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். தடுப்பூசிகளால் தடுக்கப்படக்கூடிய தொற்று நோய்களின் பரவலை இது அதிகப்படுத்தும். அம்முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே ஏழை மாணவர்களுக்கு இலவசமான பயிற்சி மையங்களை தொடங்கிட வேண்டும். தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்துவது குறித்து ஓர் நிபுணர்குழுவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். மேலும் அரசுப் பணியில் இருந்து விலகும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், மகப்பேறு மருத்துவர்களாக உள்ளனர். அதற்கான காரணங்களை அரசு ஆராய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு அதிக பட்சமாக காலையில் 8 மணி நேரமும், இரவில் 12 மணி நேரமும் மட்டுமே தொடர்ச்சியான பணி வழங்க வேண்டும். தொடர்ச்சியாக 24 மணி நேர பணி வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசிகளை வழங்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.