பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் தொடர் மணல் கொள்ளை நிலத்தடி நீர் குறையும் அபாயம்: விவசாயிகள் கவலை

* கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரியபாளையம்: பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் தொடர் மணல் கொள்ளை நடப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம், மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு ஆரணி ஆற்றங்கரையையொட்டி சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களில் வெண்டைக்காய், கத்தரி, முள்ளங்கி, கீரை வகைகள், மல்லி, முல்லை, சாமந்தி உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பட்டா விவசாய நிலங்களில் விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் கொண்டு விவசாயம் செய்கின்றனர். ஆரணி ஆறு அருகே உள்ளதால் எப்போதும் இப்பகுதியில் நீர்மட்டம் குறையாமல் இருக்கும். இந்தநிலையில் சமீப காலமாக இந்த ஆரணியாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையர்கள் சாக்கு பைகளில் மணலை நிரப்பி அவற்றை பதுக்கி வைத்து ஆட்டோக்களிலும், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் கடத்திச் செல்கின்றனர்.

அந்த மணலை ஆரணி, பெரியபாளையம், செங்குன்றம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை ஒன்றுக்கு ₹100 முதல் ₹150 வரை விலை வைத்து அவர்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் இந்த ஆரணியாற்றின் நீர்மட்டத்தை நம்பிதான் நாங்கள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அந்த தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாகவே சில மணல் கொள்ளையர்கள் அத்துமீறி ஆரணியாற்றில் நுழைந்து கரைகளை சேதப்படுத்தி மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளை கிணறு இருக்கிறது.

இங்கிருந்து பைப்புகள் வழியாக கிராமத்திற்குத் தேவையான குடிதண்ணீர் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளைகளில் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது இப்பகுதியில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதால் நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவலையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீப காலமாக இந்த ஆரணியாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையர்கள் சாக்கு பைகளில் மணலை நிரப்பி அவற்றை பதுக்கி வைத்து ஆட்டோக்களிலும், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் கடத்திச் செல்கின்றனர்.

The post பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் தொடர் மணல் கொள்ளை நிலத்தடி நீர் குறையும் அபாயம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: