கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் சிக்கி 125 பேர் பலி: சாலைகள், பாலங்கள், வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

* 400 குடும்பங்களின் கதி என்ன? ராணுவம், விமானப்படை மீட்பு பணியில் தீவிரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 125க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்பட வடமாவட்டங்களில் இடைவிடாது பேய்மழை பெய்து வருகிறது.

இதனால் இங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் நிரம்பியுள்ளன. தொடர்மழை காரணமாக நேற்று வயநாடு, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம் உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இடுக்கி, வயநாடு உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேரங்களில் மலையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தொடங்கி வயநாடு மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால், நேற்று அதிகாலை வயநாட்டில் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 1 மணியளவில் மேப்பாடி அருகே உள்ள முண்டக்கை டவுண் பகுதியில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் அருகிலுள்ள சூரல்மலை பள்ளிக்கூடத்திற்கு அருகேயும், அட்டமலை பகுதியிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 125க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காணாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால் சூரல்மலை பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்தப் பகுதி முழுவதும் மலையிலிருந்து உருண்டு வந்த பெரிய பாறைகள், மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் தான் வெள்ள நிவாரண முகாம் செயல்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் பள்ளி பெரும்பாலும் மண்ணால் மூடப்பட்டது. இதனால் இங்கு எத்தனை பேர் நிலச்சரிவில் சிக்கினார்கள் என தெரியவில்லை. சூரல்மலை டவுணில் இருந்து முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதிக்கு செல்ல ஒரே ஒரு பாலம்தான் உள்ளது. இந்தப் பாலம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. ஏராளமான வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. அட்டமலை மற்றும் சூரல்மலை பகுதியில் 400 குடும்பத்தினர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு சிக்கியுள்ளவர்களை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களை மீட்பதற்காக கேரள அரசு ராணுவத்தின் உதவியை நாடியது. இதையடுத்து கோவை சூலூரிலுள்ள விமானப்படை மையத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு விரைந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தரையிறங்க முடியவில்லை. இதனால் 2 ஹெலிகாப்டர்களும் கோழிக்கோட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடம் கொண்டுவரப்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்பட மீட்புப் படையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். சம்பவ இடத்திற்கு 5 கேரள அமைச்சர்களும் விரைந்தனர். இதற்கிடையே தங்களது தோட்டத்தை சேர்ந்த 8 தொழிலாளர்களை காணவில்லை என்று ஒரு தனியார் தேயிலை நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சூரல்மலையில் இருந்து மூன்றரை கிமீ தொலைவில் முண்டக்கை கிராமம் உள்ளது. இங்கு செல்வதற்கு ஒரே ஒரு பாலம் தான் உள்ளது. இந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை கிராமமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், பள்ளிக்கூட கட்டிடம் ஆகியவை மண்ணோடு மண்ணானது. இங்கு மீட்புப் பணிகளுக்காக கண்ணூர் ராணுவ முகாமில் இருந்து மருத்துவக் குழு உள்பட 138 வீரர்களும், கோழிக்கோடு முகாமில் இருந்து 43 வீரர்களும் சென்றனர். முண்டக்கை பகுதிக்கு செல்ல ராணுவத்தினர் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஹெலிகாப்டர் இறங்க முடியாததால் நேற்று மதியம் வரை இங்கு மீட்புப் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ராணுவத்தினரின் தீவிர முயற்சியின் பலனாக வேறு பகுதி வழியாக கயிறு கட்டி நடந்து சென்று சுமார் 13 மணிநேரத்திற்கு பின்னர் மட்டுமே மீட்புப் பணிகளை தொடங்க முடிந்தது. இதன் பின்னர் பெரும் சிரமத்திற்கு இடையே இந்த பகுதியை சேர்ந்தவர்களை ஒவ்வொருவராக ராணுவத்தினர் மீட்டனர். முண்டக்கை பகுதியில் ஏராளம் விடுதிகள் உள்ளன. இங்கு 250க்கு மேற்பட்டோர் சிக்கியிருந்தனர். அவர்களும் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

* கேரளாவுக்கு தேவையான உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசு தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள அரசிற்கு தேவையான உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் அதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோனதை அறிந்து மிகவும் வேதனைக்குள்ளானேன்.

இன்னமும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. முழுவீச்சில் நடந்து வரும் மீட்புப் பணிகள் நிச்சயம் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன். நமது சகோதர மாநிலமான கேரளம் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அவர்களுக்கு தேவைப்படும் எந்தவிதமான இயந்திரம், பொருள் மற்றும் மனித ஆற்றல் சார்ந்த உதவியையும் வழங்க மிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

* தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம்
வயநாடு நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

தமிழ்நாட்டிலிருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார். நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

* ராகுல் காந்தி, பிரியங்கா இன்று வயநாடு வருகை
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவால் பலியான மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ராகுல், பிரியங்கா இன்று வயநாடு வருகின்றனர்.

* 48 உடல்கள் மட்டுமே அடையாளம் தெரிந்தது
வயநாட்டில் இதுவரை 48 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. பல உடல்கள் உருக்குலைந்திருப்பதாலும், அவர்களது உறவினர்கள் அருகில் இல்லாததாலும் அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் காணப்பட்ட உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

* 25 கிமீ தொலைவுக்கு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள்
சூரல்மலை பகுதியில் சூரல்மலை ஆறு ஓடுகிறது. இதுவரை சிறிய ஓடை போல் தான் இந்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் இந்த ஆறு பரந்து விரிந்து கடல் போல பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள மலைப்பகுதியில் உருவாகும் இந்த ஆறு மலப்புரம் மாவட்டத்தை தாண்டி கடலில் கலக்கிறது.

நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஏராளமான உடல்கள் இந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 11 பேரின் உடல்கள் சூரல்மலை பகுதியிலிருந்து 25 கிமீ தொலைவில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள போத்துகல் என்ற பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. அதுவும் சில உடல்கள் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆற்றின் வேகத்தில் மேலும் பல உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

* பினராயி விஜயனுடன் மோடி பேச்சு
பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனை டெலிபோனில் தொடர்பு கொண்டு நிலச்சரிவு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

* கேரளாவில் 2 நாள் துக்கம் கடைப்பிடிப்பு
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஏராளமானோர் பலியானதை தொடர்ந்து கேரளாவில் நேற்றும், இன்றும் 2 நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் தேசிய கொடியை பாதிக்கம்பத்தில் கட்டப்படும். அரசு சார்பில் விழாக்கள் நடைபெறாது.

* வெளிநாட்டினர் கதி?
வயநாடு மாவட்டத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இவர்கள் தங்குவதற்காக வனப்பகுதியிலும், மலைப்பகுதிகளிலும் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும் பல விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் வெளிநாட்டினர் பலர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

The post கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் சிக்கி 125 பேர் பலி: சாலைகள், பாலங்கள், வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: