வினாத்தாள் லீக், ஆள்மாறாட்டம் செய்தால்; ஆயுள் தண்டனை ரூ.1 கோடி அபராதம்: உ.பி-யில் புதிய சட்டம் அமல்

லக்னோ: உத்தரபிரதேச அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு செய்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) -2024 என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கடந்த ஜூன் 25ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுத்தல் மற்றும் வினாத்தாள் கசிவு – 2024 என்ற அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது அந்த அவசர சட்டம் பேரவையின் மூலம் சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி வினாத்தாள்கள் தயாரிப்பதில் இருந்து பொதுத் தேர்வுகளை நடத்துவது வரை அச்சிடுதல், பாதுகாப்பு, விநியோகம், தேர்வுகளைக் கண்காணிப்பது, விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல், முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட விஷயங்கள் அடங்கி உள்ளன.

இந்த மசோதாவில் உத்தரப் பிரதேச பொதுச் சேவை ஆணையம், உத்தரப் பிரதேச துணைப் பணியாளர்கள் தேர்வு வாரியம், உத்தரப் பிரதேச வாரியம், பல்கலைக்கழகம் உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளுக்கு பொருந்தும். போலி வினாத்தாள்களை விநியோகிப்பது அல்லது போலியான வேலைவாய்ப்பு இணையதளங்களை உருவாக்குவது போன்றவையும் தண்டனைக்குரிய குற்றமாகும். முறைகேடு காரணமாக தேர்வு பாதிக்கப்பட்டால், அதன் மீதான நிதிச்சுமையை முறைகேடு கும்பலிடம் இருந்து வசூலிக்கவும், தேர்வில் முறைகேடு செய்யும் நிறுவனங்கள் நிரந்தரமாக தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதியப்படும். மேலும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்க மசோதா வகை செய்கிறது. இருப்பினும், தண்டனை மூன்று ஆண்டுகள், ஏழு ஆண்டுகள், 10 ஆண்டுகள் அல்லது 14 ஆண்டுகள் வரை இருக்கலாம். அதேபோல், ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

 

The post வினாத்தாள் லீக், ஆள்மாறாட்டம் செய்தால்; ஆயுள் தண்டனை ரூ.1 கோடி அபராதம்: உ.பி-யில் புதிய சட்டம் அமல் appeared first on Dinakaran.

Related Stories: