வயநாட்டில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.. மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் இரங்கல்..!!

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். வயநாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு. ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது எனவும் ஜெகதீப் தன்கர் இரங்கல் தெரிவித்தார்.

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உடனே ரூ.5,000 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

வயநாடு விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள்: ஜெகதீப் தன்கர்

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தை தயவுசெய்து அரசியல் ஆக்காதீர்கள் என மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: நட்டா

கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். கேரள முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்திருக்கிறார். கேரள மாநில அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம்.

ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது: கார்கே

இந்நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது என மாநிலங்களவையில் கார்கே தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என தெரியவில்லை. வயநாட்டிற்கு ராணுவம் சென்றதா, மீட்புப் பணிகள் குறித்த தகவலை வெளிப்படையாக கூறவேண்டும். அவைத்தலைவர் நீங்கள் தகவல் கொடுக்கிறீர்கள்; அரசிடம் இருந்து தகவலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

The post வயநாட்டில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.. மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: