புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது: 2ம்தேதி பட்ஜெட் தாக்கல்

புதுச்சோி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது. ஆக.2ம்தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டசபையின் 5வது கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ம்தேதி (வெள்ளிக்கிழமை) 2024- 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குபின் தேஜ கூட்டணி அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால், பல்வேறு சலுகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இதனிடையே தேஜ கூட்டணிக்குள் உரசல் நீடித்து வரும் நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கும் முதல்நாளில் இருந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாநில அந்தஸ்து பிரச்னை, ரேஷன் அரிசி விவகாரம், நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் பாரபட்சம், வேலைவாய்ப்பின்மை, துறைகளில் எழுந்துள்ள முறைகேடு புகார்கள், ஜிப்மருக்கு நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சபையில் கொண்டு வந்து அமளியில் ஈடுபடலாம் என்பதால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி பாஜவில் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த கடைசியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்து உள்ளது. இதனால் அவர்களின் நிலைப்பாடு சட்டசபையில் எப்படி இருக்கும் என்ற குழப்பமும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது. அமைச்சர்களுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் குரல் கொடுக்கும் பட்சத்தில் சபையில் விவாதங்கள் அனல்பறக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 2 வாரம் சட்டசபையை நடத்த திட்டமுள்ளதாக தெரிகிறது. இதனிடையே புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் வருகிற 2ம்தேதி மாலை பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது: 2ம்தேதி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: