தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்து பெண் உள்பட 3 பேர் படுகாயம்


தாம்பரம்: தாம்பரம் அருகே கோயில் தீமிதி திருவிழாவின்போது, அக்னி குண்டத்தில் தவறி விழுந்து தாம்பரம் மாநகர அதிமுக பொருளாளர், அவரது மனைவி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். கிழக்கு தாம்பரம், பழைய ஜிஎஸ்டி சாலையில், இரும்புலியூர் பகுதியில் ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, 28ம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்தனர். இதில், முன்னாள் கவுன்சிலரும், தாம்பரம் மாநகர அதிமுக பொருளாளருமான மாணிக்கம், அவரது மனைவி தனலட்சுமியுடன் தீமிதித்தார். அப்போது திடீரென மாணிக்கம், தனலட்சுமி, அன்பழகன் ஆகிய 3 பேர் தவறி அக்னி குண்டத்தில் விழுந்தனர்.

உடனடியாக அங்கிருந்த பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் தீயில் விழுந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, தாம்பரம் மேம்பாலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

The post தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்து பெண் உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: