மும்பை: கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்வில், பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம் என்று நடிகையும், எம்பியுமான கங்கனா காட்டமாக பதிவிட்டுள்ளார். பிரான்ஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், பிரபல இத்தாலிய ஓவியர் லியனார்டோ டாவின்சியின் ‘தி லாஸ்ட் சப்பர்’ என்ற ஓவியத்தை கிண்டல் செய்யும் விதமாக நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சி இருந்தது. பிரான்ஸைச் சேர்ந்த பிரபல டிராக் ரேஸ் கலைஞர்கள் 3 பேர் உட்பட 18 பேர் நிகழ்த்திய ‘டிராக் ஆக்ட்’ நிகழ்ச்சியானது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் வீடியோவை பகிர்ந்துள்ள பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா வெளியிட்ட பதிவில், ‘பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க விழாவில், ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை கிண்டல் செய்யும் விதமாக நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.
நீல வர்ணம் பூசப்பட்ட நிர்வாண மனிதனை சுட்டிக்காட்டி நடித்துள்ளனர். இதன் மூலம் கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். மிகவும் அவமானமானது. இதுபோன்ற நிகழ்ச்சியானது ஒரே பாலினத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. ஓரினச்சேர்க்கைக்கு நான் எதிரானவள் அல்ல. ஆனால் பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம்? உலகின் பெரும்பாலான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டியில், பாலியல் தொடர்பான ‘தீம்’ தேவையானதா? உடலுறவு என்பதை படுக்கையறையில் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? அது ஏன் தேசிய அடையாளமாக இருக்க வேண்டும்? இது மிகவும் விசித்திரமானது’ என்று விமர்சித்துள்ளார்.
The post கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கிய நிகழ்ச்சி; பாலினத்திற்கும், ஒலிம்பிக்கிற்கும் என்ன சம்பந்தம்?: நடிகையும், எம்பியுமான கங்கனா காட்டம் appeared first on Dinakaran.