×

டெல்லியில் நடக்கிறது பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம்

* முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி புறக்கணிப்பு
* எதிர்ப்பை பதிவு செய்ய மம்தா,ஹேமந்த் சோரன் பங்கேற்பு

புது டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதிஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிக்கிறார்கள். அதே சமயம் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து ெகாள்ளப்போவதாக அறிவித்து உள்ளனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின்னர் முதல் நிதிஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்து ெகாள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக்கின் 9 வது ஆட்சி மன்றக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான விக்சித் பாரத் 2047 என்ற ஆவணம் குறித்து விவாதிக்கப்படும் என்று மூத்த ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 100வது ஆண்டான 2047ல் 30 டிரில்லியன் டாலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற உதவும் தொலைநோக்கு ஆவணம் இந்த கூட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே 2023ம் ஆண்டில், விக்சித் பாரத் 2047க்கான 10 துறை சார்ந்த கருப்பொருள் ஒருங்கிணைக்கும் பணி நிதிஆயோக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த முறையும் விக்சித் பாரத் குறித்தும், மாநிலங்களின் வளர்ச்சி, நிதிஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ ஆளும் மாநில முதல்வர்கள், துணைமுதல்வர்கள், நிதியமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்கிறார்கள்.

ஆனால் ஒன்றிய அரசு கடந்த 23ம் தேதி தாக்கல் செய்த பட்ெஜட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவது இல்லை என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து விட்டார். அதே போல் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர்சிங் சுக்கு ஆகியோரும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவது இல்லை என்று தெரிவித்து விட்டனர். அந்த வரிசையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக முடிவு செய்து அறிவித்து விட்டனர்.

ஆனால் நிதிஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும், நானும் கூட்டத்தில் கலந்துகொள்வோம். மற்றவர்கள் சார்பாக நாங்கள் பேசுவோம்’ என்றார். கூட்டத்தில் பட்ஜெட் உரையில் ஜார்க்கண்ட் புறக்கணிக்கப்பட்டது குறித்து குரல் எழுப்ப அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல் கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜ கூட்டணி யில் அங்கம் வகிக்கும் புதுவை முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி ஆகியோரும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.

 

The post டெல்லியில் நடக்கிறது பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Niti Aayog ,Delhi ,Modi ,Chief Minister ,M.K.Stalin ,India ,Mamata ,Hemant Soran ,New Delhi ,
× RELATED தொழில் வளர்ச்சி இந்திய அளவில் சாதனை...