புதுடெல்லி: துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றை விவசாயியிடம் இருந்து அரசே கொள்முதல் செய்யும் என ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், “விவசாயிகள் உற்பத்தி செய்யும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றை அரசாங்கமே கொள்முதல் செய்யும். இதற்காக விவசாயிகள் இ-சம்ரிதி இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2003-2004 மற்றும் 2013-2014க்கு இடையே குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் 45 கோடி மெட்ரிக் டன்கள் மட்டுமே வாங்கப்பட்டது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-15 மற்றும் 2023-24 இடையே மொத்தம் 69.18 கோடி மெட்ரிக் டன்களை குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
* காங்கிரஸ் குற்றச்சாட்டு
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து சிவ்ராஜ் சிங் சவுகான் அளித்த பதில் குறித்து காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “அரிசி, கோதுமை மற்றும் பிற விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதுதான் பிரச்னை. இதுபற்றிய கேள்விக்கு சுமார் 30 நிமிடங்களுக்கு பதிலளித்த அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேரடி பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டார்” என குற்றம்சாட்டி உள்ளார்.
The post துவரம், உளுந்து, மசூர் பருப்பை அரசே கொள்முதல் செய்யும்: ஒன்றிய அமைச்சர் சவுகான் அறிவிப்பு appeared first on Dinakaran.