பந்தலூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் கலெக்டரிடம் மக்கள் மனு

*பள்ளிகளில் காலை உணவின் தரம் பரிசோதனை, ஆய்வு

பந்தலூர் : பந்தலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகள் உணவு உண்பதை ரசித்து பார்த்தார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று முன்தினம் பந்தலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உணவுகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கரோலைன் மேற்கு பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, பந்தலூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர் விடுதியை கலெக்டர் ஆய்வு செய்தார். விடுதிகளில் மாணவ, மாணவிகளின் அடிப்படை வசதிகளை கலெக்டர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

அதன்பின்னர் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் சந்தித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பெற்றுக்கொண்டார்.

மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் போஷான் அபியான் திட்டத்தின்கீழ், 361 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பில் திறன்பேசிகளை வழங்குவதன் அடையாளமாக 5 அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன்பேசிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, துறை வாரியான அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைய அதிகாரிகள் செயல்படவேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌசிக், மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல், வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.பாலுசாமி, நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் முனுசாமி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தேவகுமாரி, பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பந்தலூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் கலெக்டரிடம் மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: