மக்கள் வருமானத்தில் 80% எடுத்துவிட்டது இங்கிலாந்தைப்போல் வரி செலுத்துகிறோம் சோமாலியாவைப்போல் சேவை கிடைக்கிறது: ஆம்ஆத்மி எம்பி ராகவ்சதா விளாசல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடந்த பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா பேசியதாவது: பாஜ ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜவுக்கு வாக்களித்தவர்கள் உட்பட சமூகத்தின் எந்தப் பிரிவினரையும் திருப்திப்படுத்த இந்த பட்ஜெட் தவறிவிட்டது. பொதுவாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, ​​சமூகத்தின் சில பிரிவினர் மகிழ்ச்சியாக இருப்பர். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இந்த முறை, ஒன்றிய அரசு அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

பாஜ ஆதரவாளர்கள் கூட மகிழ்ச்சியடையவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் மூலதன ஆதாய வரி போன்ற வரிகளின் மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அதற்குப் பதில் பொதுமக்களுக்கு என்ன கிடைக்கிறது? நாங்கள் இங்கிலாந்தைப் போல வரி செலுத்துகிறோம், ஆனால் சோமாலியாவைப் போல சேவைகளைப் பெறுகிறோம்.

உலகத் தரம் வாய்ந்த சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வியையா ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்குகிறது? 2019ம் ஆண்டில், பாஜவுக்கு மக்களவையில் 303 இடங்கள் இருந்தன. ஆனால் நாட்டு மக்கள் அந்த இடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை விதித்து அவற்றை 240 ஆகக் குறைத்து விட்டனர். பா.ஜ. வின் சீட் எண்ணிக்கை குறைந்ததற்கு பொருளாதார சிக்கல்களே காரணம். இந்தப் போக்குகள் தொடர்ந்தால், பாஜ இன்னும் சரிந்து, 120 இடங்களுக்குள் சுருங்கக்கூடும். இவ்வாறு பேசினார்.

The post மக்கள் வருமானத்தில் 80% எடுத்துவிட்டது இங்கிலாந்தைப்போல் வரி செலுத்துகிறோம் சோமாலியாவைப்போல் சேவை கிடைக்கிறது: ஆம்ஆத்மி எம்பி ராகவ்சதா விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: