தென்னிந்தியாவில் உள்ள ஏகலைவா பள்ளிகளில் வடமாநில ஊழியர்கள்: திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டு

புதுடெல்லி: தென்னிந்தியாவில் உள்ள ஏகலைவா பள்ளிகளில் வடமாநில ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டினார். மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது: பழங்குடியினர் நலனுக்காக ஏகலைவா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஊழியர்கள் நியமிக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடம் விட வேண்டும்.

ஏனெனில் தென்மாநிலங்களில் உள்ள ஏகலைவா பள்ளிகளில் வட இந்தியாவில் இருந்து ஊழியர்களை பணியமர்த்துவதால் அங்கு குறைந்த அளவு மாணவர்களே சேருகிறார்கள். மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரத்தை ஒன்றிய அரசு தன்னிடம் எடுத்துக்கொண்டதால் இந்த பிரச்னை உருவாகி உள்ளது. இந்த பள்ளிகளில் 303 முதல்வர்கள், 707 இளநிலை செயலக உதவியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இப்போது தென்னிந்தியாவில் உள்ள ஏகலைவா பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பொருத்தமின்மை கல்விக்குத் தீங்கானது. ஏனெனில் அங்கு உள்ளூர் பழங்குடி கலாச்சாரம் மற்றும் சூழலைப் புரிந்துகொள்வது முக்கியமானது. மேலும் அந்த பணிகளுக்கு இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதால் தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டு, கற்பித்தல் திறன் பாதிக்கப்படுகிறது.

புதிய ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனவே ஏகலைவா பள்ளிகளில் ஊழியர்கள் நியமிக்கும் பொறுப்பை அந்தந்த மாநில அரசுகளிடம் திரும்ப வழங்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பேசினார்.

The post தென்னிந்தியாவில் உள்ள ஏகலைவா பள்ளிகளில் வடமாநில ஊழியர்கள்: திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: