காங்., பாஜ எம்பிக்கள் வாக்குவாதம் அடுத்தடுத்து இருமுறை மக்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தில் பங்கேற்ற பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் எம்பியும் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னிபேசினார். அப்போது, சமீபத்தில் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவி ஒன்றிய அமைச்சராகி உள்ள ரவ்னீத் சிங் பிட்டு குறுக்கிட்டு பேசினார். இதனால் சன்னி, பிட்டு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. பிட்டுவின் தாத்தாவும் முன்னாள் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பியந்த் சிங் படுகொலையை சன்னி சுட்டிக் காட்டி பேசினார்.

பதிலுக்கு சன்னி குறித்தும் சோனியா காந்தி குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கி பிட்டு பேசினார். இருவரும் அவையின் மைய பகுதிக்கு செல்ல முயன்றனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை தொடங்கியதும் பேசிய சன்னி, தங்கள் கோரிக்கைக்காக போராடிய விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழக்கு பதிந்ததாக கூறினார்.

இது தவறான தகவல் என்றும் இதற்காக சன்னி மீது உரிமை மீறல் நோட்டீஸ் விடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார். இந்த விவகாரத்தால் மீண்டும் அமளி ஏற்பட அவை தொடர்ந்து 2வது முறையாக பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

The post காங்., பாஜ எம்பிக்கள் வாக்குவாதம் அடுத்தடுத்து இருமுறை மக்களவை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: