ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு வருத்தம் அளிக்கிறது: மலேசியாவின் பினாங்கு மாஜி துணை முதல்வர் பேட்டி

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் ராமசாமி தெரிவித்துள்ளார். மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் ராமசாமி, தமிழ்நாட்டில் கோயில் வழிபாட்டிற்காக சென்னை வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வளர்ச்சி நல்லபடியாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பார்த்த தமிழ்நாடு இப்போது இல்லை. நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. சாலை வசதிகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவின் பட்ஜெட் குறித்து முழுமையாக நான் படிக்கவில்லை. இருந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு செயல்படக்கூடாது. வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. அனைவரையும் சரிசமமாக பார்க்க வேண்டும். மலேசியாவில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான உரிமைகள், வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மலேசியாவில் தனியாக ஒரு கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன். மலேசியாவை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்றவர்கள் தமிழர்கள். அவர்கள் இன்று ஒடுக்கப்படுகிறார்கள். தமிழர்கள் தொடர்ந்து பல நாடுகளில் ஒடுக்கப்படும் காரணத்தால்தான் எங்களுடைய உரிமையை பெறுவதற்கு புதிய கட்சிகளை தொடங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு வருத்தம் அளிக்கிறது: மலேசியாவின் பினாங்கு மாஜி துணை முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: