ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும்: காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் நேற்று டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியம், காவேரி தொழில் நுட்பக் குழு உறுப்பினர் எல்.பட்டாபி ராமன், உதவி செயற்பொறியாளர் ரம்யா, காவிரி தொழில் நுட்பக் குழு உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர் நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: 32வது காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய காவிரி நீர் குறித்து முக்கியமாக பேசப்பட்டது. அப்போது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரின் அளவு உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி மாதந்தோறும் கர்நாடகா அரசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கையின் அடிப்படையில் 30ம் தேதி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடத்துவதற்காக மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுப்படி இறுதி உத்தரவுப்படிதான் அதை தாண்டி எதுவும் நாம் கேட்கவில்லை. அதன் அடிப்படையில் இந்த மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் என்ன உத்தரவு வருகிறதோ? அந்த நீரை வழங்குவதற்கான அடிப்படையில்தான் வரும் 30ம் தேதி கூட்டத்தை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மழை நன்றாக பெய்து வருவதாலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பிவிட்டதாலும் தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு வழிவகை உள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணராய சாகர் அணையில் திருப்பியும் 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கனஅடி நீர் திறந்து இருக்கிறார்கள், கபினி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

ஆகவே தண்ணீரை பொறுத்தவரை இந்த மாதம் பிரச்னை இல்லை. வரும் காலங்களில் வேண்டும் என்பதுதான் நம்முடைய முக்கியமான கோரிக்கை. அதன் அடிப்படையில் வரும் 30ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம், வாரிய கூட்டம் இல்லை ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆகும். ஜூலை மாதத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தண்ணீர் வந்துள்ளது. அத்துடன் நாம் நிறுத்த முடியாது, வரும் காலங்கள், இந்த மாதம் முடியும் வரை தண்ணீர் வர வேண்டும். மேலும் ஆகஸ்ட் மாதம் 45 டிஎம்சி நீர் நமக்கு வரவேண்டியுள்ளது, அதை வலியுறுத்தி கூட்டத்தில் முக்கியமான கோரிக்கையாக வைத்துள்ளோம், மேகதாது அணை பற்றி எதுவும் பேசவில்லை. இவ்வாறு நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் கூறினார்.

The post ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும்: காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: