வினாத்தாள் கசிவு விவகாரம் நீட் மறுதேர்வு நடத்த தேவையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஐ.ஐ.டி நிபுணர் குழுவின் அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் சர்ச்சைக்குறிய கேள்விக்கான விடை நான்காவது தேர்வு தான் சரியானது என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் பல்வேறு தரப்பிலிருந்தும் விரிவாக வாதங்கள் கேட்கப்பட்டது.

இதில் ஐஐடி நிபுணர் குழு வழங்கிய அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம். எனவே தற்போதைய சூழலில் நீட் மறு தேர்வு என்பதை ஏற்க முடியாது. இதனை நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதேப்போன்று நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கான போதுமான தேவைப்படும் விவரங்கள் எதுவும் இல்லை. மேலும் நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் விஷயங்கள் நடந்துள்ளது என்பதற்கு தேவையான மற்றும் போதுமான ஆதாரங்கள் தற்போது வரையில் இல்லை.

இதைத்தவிர நீட் தேர்வு குளறுபடிகளை சரி செய்வதற்காக ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதனை ஏற்கிறோம். மேலும் தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். மேலும் 1563 மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை அதற்காக என்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியதோ அதையே தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

The post வினாத்தாள் கசிவு விவகாரம் நீட் மறுதேர்வு நடத்த தேவையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: