வாணியம்பாடியில் போலீசார் அதிரடி கொலை குற்றவாளிகள் படத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது

*போதை மாத்திரைகள், கத்திகள் பறிமுதல்

வாணியம்பாடி : வாணியம்பாடி பகுதியில் கொலை குற்றவாளிகள் படத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேரை கைது செய்த போலீசார், போதை மாத்திரைகள், கத்திகளை பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கருதப்படும் முக்கிய கொலை குற்றவாளிகள் மற்றும் காவல் துறை சரித்திர பதிவேடுகளில் உள்ள முக்கிய கொலை குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும் எனவும், அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களை பற்றிய விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு ஏடிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து, இதுதொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 2021 செப்டம்பர் 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படை செல்லா என்ற செல்வகுமார் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர்.

இதை கண்காணித்த தனிப்பிரிவு போலீசார் ரீல்ஸ் வெளியிடும் இளைஞர்கள் கொலை குற்றவாளியுடன் தொடர்பில் உள்ளனரா? என்ற கோணத்தில் வாணியம்பாடி பெரிய பேட்டை அப்துல் ரகுமான்(23), நியூடவுன் ஜீவா நகரை சேர்ந்த காலு என்ற தஸ்தகிர்(22) ஆகியோரின் வீடுகளில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் சிம்கார்டுகள், சிப், போதை மாத்திரைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்‌ கொலை குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் போதைப் பொருட்களை ஆன்லைன் மூலம் பெற்றுத் தந்ததையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 2 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வாணியம்பாடியில் போலீசார் அதிரடி கொலை குற்றவாளிகள் படத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: