சர்ப்ப தோஷங்களை சீராக்கும் ராகு பகவான்

நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர். ‘அவருக்கு யோகம் அடிக்குது’ என்று சொல்ல கேட்டிருப்போம். அந்த யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான். திருமணம், லாபம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, யோகா, தியானம், கெட்ட சகவாசத்திலிருந்தும், தீய பழக்க வழக்கத்திலிருந்து மீள்வது போன்ற எல்லாமே ராகு பகவானால் முடியும். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களை அடுக்கடுக்காக சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். இவை நீங்கி நிம்மதியாக வாழ குன்றத்தூர் தலத்திலுள்ள நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இதுவே. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார். இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன்.

கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டு அருணாசலேஸ் வரர் மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள். நாகேஸ்வரர் சேக்கிழார் பிரதிஷ்டை செய்ததல்லவா? அதனால் குளம் திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார் கனவில் பழையபடி மூலவர் இருக்குமிடத்திலேயே நாகேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்யுங்கள் என்ற உத்தரவுக்கிணங்க பக்தர்கள் மீண்டும் அருணாசலேஸ்வரரை பிராகாரத்திலும், நாகேஸ்வரரை மூலவராகவும் பிரதிஷ்டை செய்தனர். பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியும் பிராகார முடிவில் காமாட்சி அம்மனும் தரிசனம் தருகிறார்கள். நாகேஸ்வரர் எனும் நாமத்தோடு அருள்பாலிப்பதாலும், ராகுவின் அம்சத்தோடு ஈசன் விளங்குவதாலும் ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடலாம். இன்றும் சர்ப்பங்கள் இரவில் இறைவனை வழிபட்டு வருவதாகக் கூறுகின்றனர். தாம்பரம், கோயம்பேடு, பூவிருந்தவல்லியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

 

The post சர்ப்ப தோஷங்களை சீராக்கும் ராகு பகவான் appeared first on Dinakaran.

Related Stories: