முத்துப்பேட்டை, ஜூலை 22: அனைத்து பாசன வடிகால், வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று முத்துப்பேட்டையில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பொருளாளர் தமிழ்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் பேசினார்கள்.
இதில் 2024ம் ஆண்டு 5ஆயிரம் உறுப்பினர்கள் பதிவு செய்வது, கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கும் பயனாளிகளுக்கு அந்த அந்த கூட்டுறவு வங்கிலேயே கடன் தொகையை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது, கடற்கரை பகுதிகளில் உள்ள பம்பு செட் இறவை பாசன திட்டத்தில் பழுது நீக்கம் செய்து பாசன வாய்க்கால் தூர்வார கோரி போராட்டம் நடத்துவது, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பாசன, வடிகால் வாய்க்கால், ஆறுகளில் உள்ள ஆகாய தாமரை அகற்ற கோரி சாலை மறியல் செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post அனைத்து பாசன, வடிகால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.