ரசாயனம் தெளித்து பழம் பழுக்க வைத்தால் ரூ.2 லட்சம் அபராதம்

 

சேலம், ஜூலை 22: பழங்களை ரசாயன ஸ்பிரே தெளித்து பழுக்க வைக்கப்படுவதாக புகார் தொடர்கிறது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவர்கள், அந்தந்த மாவட்ட பழ வியாபாரிகளிடம் எச்சரித்தும், குடோன்களை கண்காணித்தும் வருகின்றனர். தற்போது கோயில்களில் ஆடிப்பண்டிகை தொடங்க உள்ளது. இந்தநிலையில், சேலம் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மேட்டூர், தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள பழக் குடோன்களில் பழங்கள் இந்த முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு அலுவலர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.

சைனாகல், கார்பைடு கல், எத்தீபான் மூலம் பழுக்க வைக்கப்படும் மா, வாழைப் பழங்கள் தான் தற்போது விற்பனைக்கு வருகிறது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடியது அசிட்டிலீன் வாயு. இந்த வாயுவின் மூலம் மா, வாழை போன்றவை 12முதல்24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும்.மேலும், எத்தீபான் மூலம் பழங்களை அப்படியே நனைத்து பழக்க வைக்கப்படுகிறது. அவசர அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர் என்கிறனர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம், நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதித்து புற்று நோயை ஏற்படுத்தும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம் என்றும் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பழ குடோன்களை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post ரசாயனம் தெளித்து பழம் பழுக்க வைத்தால் ரூ.2 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: