தக்காளி விலை குறைவு

 

ஆண்டிபட்டி, ஜூலை 21: ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 ரூபாய் வரை விற்பனையான தக்காளியின் விலை பாதியாக குறைந்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, சித்தார்பட்டி, புதூர், அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக பெய்த மழை காரணமாக தக்காளி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது.

இதனால் தற்போது வரை தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடி மாதம் பிறந்ததையடுத்து தக்காளியின் தேவை அதிகரித்து ஆண்டிபட்டி மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1300 ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், ஆண்டிபட்டி நகர் பகுதியில் சில்லரையாக ஒரு கிலோ தக்காளி ரூ.100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட இந்த தக்காளியின் தேவை சற்று குறைந்துள்ளதால் தற்போது விலையும் பாதியாக குறைந்துள்ளது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி மார்க்கெட்டில் ரூ.600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை ஏலம் போவதால் ஆண்டிபட்டி நகரில் சில்லரையாக ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடுமையாக விலை உயர்ந்த தக்காளியின் விலை பாதியாக குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post தக்காளி விலை குறைவு appeared first on Dinakaran.

Related Stories: