சேர்ந்தகோட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

 

கமுதி, ஜூலை 21: கமுதி அருகே பேரையூர் ஊராட்சி, சேர்ந்தகோட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் சுமார் 2000 ஏக்கர் பரப்பில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. பேரையூர் கண்மாயிலிருந்து வரத்து கால்வாய் வழியாக வரும் தண்ணீர் மூலம் இந்தப் பகுதியில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கிராம விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நீர்வரத்து கால்வாய் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சேதமடைந்துள்ளது. பல இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மேலும் இந்த கால்வாய் கிராமம் வழியாக செல்கிறது.

இதில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். வரத்து கால்வாய் மீதுள்ள பாலமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், சாமிபட்டியில் இருந்து சேர்ந்தகோட்டை வழியாக இலந்தைகுளம் வரை செல்லும் கிராம சாலையும் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளது. சுமார் 2 கி.மீ. தொலைவு செல்லும் இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மழைநீர் வரத்து கால்வாய் மற்றும் கிராம சாலையை விரைவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சேர்ந்தகோட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: