267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜ பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன்: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜ பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். துபாயில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை 3 உருளைகளில் இலங்கை வாலிபர் கடத்தி கொண்டு வந்து சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து டிரான்சிட் பயணிகள் கடத்திக் கொண்டு வரும் தங்கம் கட்டிகளை விமான நிலையப் பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சபீர்அலிக்கு தெரிவித்து விடுவார்கள். சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி தங்கத்தை உள்ளாடைகளுக்குள் மறுத்து வைத்துக் கொண்டு வெளியில் கொண்டு வந்து சுங்கச் சோதனையும் இல்லாமல் கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார் என்று தெரிந்தது. 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை கடத்தியதாக தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இலங்கை சேர்ந்த கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்து விசாரித்தனர். இந்த கடத்தல் கும்பலில் வேறு யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் சில்லரை விற்பனை செய்யும் கடைகளை வித்வேதா பிஆர்ஜி என்ற நிறுவனம் குத்தகைக்கு பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சபீர் அலிக்கு விமான நிலைய ஆணையக கமர்சியல் இணை பொதுமேலாளர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாஜ நிர்வாகியான பிர்த்வி உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்த வேண்டி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post 267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜ பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன்: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: