புனே: பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து தேர்வு எழுதிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனது காரில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தி சர்ச்சையில் சிக்கியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மாற்றுத்திறனாளிக்கான போலி சான்றிதழ் சமர்ப்பித்து ஐஏஎஸ் ஆனது தெரியவந்தது. இதையடுத்து, பூஜா கேத்கர் ஐஏஎஸ் பயிற்சியை மாநில அரசு நிறுத்தியது. இந்நிலையில், குடிமைப் பணிகள் தேர்வின்போது பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக, பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்இ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து யுபிஎஸ்இ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பூஜா கேத்கர் 2022ம் ஆண்டு யுபிஎஸ்இ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போது மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக பூஜா கேத்கருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி குற்றப்பிரிவு போலீசில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் பிஎன்எஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப் பிரிவுகளில் மோசடி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார். விரைவில், பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ் தேர்ச்சியை ரத்து செய்ய யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பூஜா கேத்கர் மாற்றுத்திறனாளி சான்று கேட்டு விண்ணப்பித்தபோது, தாலேவாடே பகுதியில் இயங்கிவரும் தெர்மோவெரிடா என்ற இன்ஜினியரிங் நிறுவன முகவரியை தனது வீட்டு முகவரியாக குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த நிறுவனம் 2 ஆண்டுகளாக வரி செலுத்தாததால் அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி, சீல் வைத்தது.
The post பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜாவுக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ்: தேர்ச்சி பெற்றதை ரத்து செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.