மத்திய பல்கலைகழகம் அருகே ₹6 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி

*திருச்சி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

*உரிய தரத்துடன் விரைவில் முடிக்க உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் மத்திய பல்கலைகழகம் அருகே ரூ.6 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியினை நேற்று திருச்சி கண்காணிப்பு பொறியாளர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை சார்பில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகமானது கடந்த 2006, 11 திமுக ஆட்சி காலத்தின்போது அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதி பெரும் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் இந்த பல்கலைகழகம் அமைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பின்னர் ரூ. 1,000 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட இந்த பல்கலைகழகத்தை கடந்த 2009ம் ஆண்டில் கருணாநிதி முன்னிலையில் அப்போதைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த கபில்சிபில் திறந்து வைத்தார். தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள இந்த பல்லைகழகத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஓரிசா, பீகார் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 750 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் 5 வருட படிப்பாக எம்.எஸ்.சி இயற்பியல், வேதியல், கணிதம், பயோ டெக்னாலஜி மற்றும் எம்.ஏ பொருளாதாரம் மற்றும் பிஎஸ்.சி, பி.எட் (கணிதம்) உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருவதையொட்டி துணை வேந்தர் கிருஷ்ணன் உட்பட 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பேராசிரியர்களுக்கான குடியிருப்பு என்பது நீலக்குடி எதிரே இருந்து வரும் நாகக்குடி கிராமத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த நாகக்குடியில் மத்திய பல்கலைகழகத்துடன் இணைந்த கேந்திர வித்யாலயா பள்ளியும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நீலக்குடி மற்றும் நாகக்குடியை இணைப்பதற்கு வெட்டாற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டி தர வேண்டும் என மத்திய பல்கலைகழகம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு (2023, 24) திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் ஒன்று கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவை கடந்த ஜனவரி 25ம் தேதி எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் முன்னிலையில் கலெக்டர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்.

இந்நிலையில் கங்களாஞ்சேரியிலிருந்து வடகண்டம் மற்றும் மணக்கால் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த உயர்மட்ட பாலமானது 75 மீட்டர் நீளத்திலும், 9.9 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ள நிலையில் இதற்கான கட்டுமான பணி என்பது தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதை நெடுஞ்சாலை துறை திருச்சி கண்காணிப்பு பொறியாளர் செந்தில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மத்திய பல்கலைகழகம் அருகே ₹6 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: