சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

சென்னை: புதிய மாநகராட்சிகள் உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகளை குறைத்து சட்டப்பேரவை கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதைப்போன்று ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும், சென்னை குடிநீர் வாரிய விதிகளில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல் திருத்தம் செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

இத்துடன், சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து, அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இச்சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

The post சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: