கடந்த ஆண்டை விட பதிவுத்துறையில் ரூ.821 கோடி வருவாய் அதிகரிப்பு: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பதிவுத்துறை வருவாய் ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தின்போது, பதிவுத்துறையில் பணியின்போது மறைந்த 2 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்த அலுவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவுசெய்யும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: பதிவுத்துறையில் 2024-25 நிதி ஆண்டில் நேற்று முன்தினம் (ஜூலை 17ம் தேதி) வரை ரூ.5920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் ரூ.821 கோடி அதிகம். மேலும், அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு செய்து பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆவணம் பதிவு செய்தல், ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைத்தல்,

போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கடந்த ஆண்டை விட பதிவுத்துறையில் ரூ.821 கோடி வருவாய் அதிகரிப்பு: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: