பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கு அனுப்பும் நிதியை நிறுத்திய ஒன்றிய அரசு: பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம்

சென்னை: பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிரதமர் மோடியால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது.

இதற்கு 60% நிதிச்சுமையை மத்திய அரசும், 40% மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு, கேரளம், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில அரசுகளும் இன்னும் கையெழுத்திடவில்லை.

தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் தங்கள் விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை மறுத்துவிட்டன. இதன் காரணமாக இத் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் மற்றும் ஜனவரி-மார்ச் காலாண்டுகளுக்கான எஸ்.எஸ்.ஏ திட்டத்திற்கான நிதியின் மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளையும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான முதல் தவணையையும் மூன்று மாநிலங்களும் நிதி தரப்படவில்லை.

இதனால், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க அமைச்சகத்திற்கு பல கடிதங்கள் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பி இருந்தன. டெல்லி ரூ. 330 கோடி, பஞ்சாப் ரூ. 515 கோடி மற்றும் மேற்கு வங்கம் ரூ. 1,000 கோடிக்கு முக்கால் காலாண்டுகளில் பெற வேண்டிய நிதிக்காக காத்திருக்கின்றன. நிதி நிறுத்தம் பற்றிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சகம் பதிலளிக்கவில்லை. ஆனால் மாநிலங்கள் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் நிதியை தொடர்ந்து பெற முடியாது மற்றும் திட்டத்தின் ஒரு பகுதியான பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற தகவல்கள் மட்டும் அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களும் ஆம் ஆத்மி கட்சியால் ஆளப்படும் நிலையில், “ஸ்கூல்ஸ் ஆஃப் எமினன்ஸ்” என்ற முன்மாதிரியான பள்ளிகளுக்கு ஏற்கனவே இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதால், அந்த மாநிலங்கள் பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. மேற்கு வங்கம் தங்கள் பள்ளிகளின் பெயர்களுக்கு ‘பி.எம் ஸ்ரீ’ என்று பெயர் சூட்டப்படுவதை எதிர்த்தது. மேற்கு வங்கத்தின் கல்வி அமைச்சர் பிரத்யா பாசு மற்றும் கல்விச் செயலாளர் மணீஷ் ஜெயின் ஆகியோர் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் நிதியை விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லி அரசும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 2023 முதல், ஒன்றிய அரசுக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே குறைந்தது ஐந்து கடிதங்கள் பரிமாறப்பட்டதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன. இதில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எழுதிய கடிதமும், மாநில அரசையும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டது மற்றும் திட்டத்திலிருந்து விலகுவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. பஞ்சாபின் கல்விச் செயலர் கமல் கிஷோர் யாதவ், கடந்த மார்ச் 15 அன்று, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் இருக்க விரும்பவில்லை என்று ஒன்றிய அரசுக்குத் தெரிவித்துள்ளார்.

மாநிலம் ஏற்கனவே தனது சொந்த “ஸ்கூல்ஸ் ஆஃப் எமினன்ஸ்”, “ஸ்கூல்ஸ் ஆஃப் ப்ரில்லியன்ஸ்” மற்றும் “ஸ்கூல்ஸ் ஆஃப் ஹேப்பினஸ்” ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்படியாக, பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டுக்கான 3வது மற்றும் 4வது தவணை நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளம், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கு அனுப்பும் நிதியை நிறுத்திய ஒன்றிய அரசு: பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: