சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை டிஐஜி, கண்காணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம்

திருச்சி: திருச்சி சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத டிஐஜி , கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் சாரங்கன் (32) என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் சி.பி.1 தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன், திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுதொடர்பாக திருநங்கை, சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டிஐஜி ஜெயபாரதி ஆகியோரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது அந்த காவலருக்கு சாதகமானதால் தொடர்ந்து அவர், திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட பணிகள் ஆணையத்தில் திருநங்கை புகார் மனு கொடுத்தார். இதுபற்றி விசாரணை நடத்த சுப்புராமன் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்தது.

மேலும் டிஎஸ்பி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர், சிறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்ததில், அந்த சிறை காவலர், திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டிஐஜி ஜெயபாரதி, சிறைகாவலர் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் டிஐஜி ஜெயபாரதி வேலூர் பயிற்சி பள்ளிக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் நவல்பட்டு காவல் பயிற்சி பள்ளிக்கும் நேற்றுமுன்தினம் மாற்றப்பட்டனர். மத்திய சிறை கண்காணிப்பாளராக (பொ) பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ருக்மணியும், டிஐஜியாக (பொ) மதுரை டிஐஜி பழனியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை டிஐஜி, கண்காணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: