தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 17: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 229 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் உயிரிழந்தனர். இதில் குணமடைந்து 161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது ஒருவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்பி சமய்சிங் மீனா உள்பட டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிடமாற்றம் செய்து தற்போதுவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளரர். இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷ சாராய விவகாரத்தில் சாராய வியாபாரிகளிடம் நேரடி தொடர்பில் இருந்ததாக தனிப்பிரிவு போலீசார் போன் நம்பர்களை ரகசியமாக காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அதில் சாராய வியாபாரிகளிடம் தனிப்பிரிவு போலீசார் பலமுறை தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபரங்களை கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத்சதுர்வேதி தமிழக டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனையடுத்து கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், கச்சிராயபாளையம் தனிப்பிரிவு போலீசார் கணேஷ், சங்கராபுரம் தனிப்பிரிவு போலீசார் சிவஜோதி, சின்னசேலம் தனிப்பிரிவு போலீசார் சரவணன் ஆகிய 6 பேர் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்தீர்களா என்றும், பல்வேறு தவறுகளை சுட்டிகாட்டி பல கேள்விகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி விளக்கம் கேட்டு குறிப்பு ஆணை கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி16 பேரும் குறிப்பாணைகளுக்கு தனித்தனியாக பதில் விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த விளக்கம் சரியானதாக இல்லை என கருதி எஸ்பி ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷ சாராய விவகாரத்தில் கண்காணிக்க தவறியதாகவும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், ராஜேந்திரன், தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், கணேஷ், சிவஜோதி, சரவணன் ஆகிய 7 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை வடக்கு மண்டல ஐஜி அதிரடி உத்தரவிட்டார்.

அதன்படி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷாமிட்டல் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

விஷ சாராய விவகாரத்தில் கல்வராயன்மலை பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றபோது கரியாலூர் தனிப்பிரிவு போலீசார் பிரபு தவறான தகவல் கொண்ட வீடியோ ஒன்றை ஊடகத்திற்கு வெளியிட்ட விவகாரத்தில் பிரபுவை கள்ளக்குறிச்சி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணிக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சக்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோர் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: