சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்சாரச் சட்டம் 2003ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் தலைவர் பதவி காலியிடம் ஏற்பட உள்ளது. இந்த பதவியை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.ஜி.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வுக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15ம் தேதி நடந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரும் ஜூலை 31ம் தேதி மாலை 6 மணி வரை வரவேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த விவரங்கள் இணையதள முகவரி https://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கவரும் 31ம் தேதி வரை அவகாசம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.