புதைந்த நிலையில் காணப்பட்ட சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை நேரில் ஆய்வு செய்த எம்பி, எம்எல்ஏ உறுதி பெரணமல்லூர் அடுத்த ஆயிலவாடி ஏரி கரையில்

பெரணமல்லூர், ஜூலை 16: பெரணமல்லூர் அருகே ஆயிலவாடி ஏரிக்கரையில் புதையுண்ட ஆலவாய் சுந்தரேஸ்வரர் சிவன் கோயிலை மீட்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த ஆரணி எம்பி மற்றும் வந்தவாசி எம்எல்ஏ உறுதி அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கடந்த பல ஆண்டுகளாக பாதி புதைந்த நிலையில் இருந்த ஆலவாய் சுந்தரேஸ்வரர் சிவன் கோயிலை மீட்ட பொதுமக்கள் கடந்த ஒரு வருடமாக வழிபட்டு வருகின்றனர். பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த 10ம் தேதி கோயிலின் முழு பகுதியும் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஏரி கரையில் புதையுண்ட கோயிலின் மறுபக்கத்தையும் ஜேசிபி உதவி கொண்டு தோண்டி எடுத்தனர்.

பின்னர் ஏரிக்கரையின் பாதுகாப்பு கருதி கரையை பலப்படுத்தும் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரில் சென்று ஏரிக்கரையின் பாதுகாப்பு அதன் பலம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது இந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ஆரணி எம்பி எம்.எஸ்.தரணி வேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் ஆயிலவாடி கிராமத்திற்கு சென்று ஏரிக்கரையில் புதையுண்டு பொதுமக்களால் மீட்டெடுத்த ஆலவாய் சுந்தரேஸ்வரர் கோயிலை பார்வையிட்டனர். அப்போது இந்தக் கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் எம்பி, எம்எல்ஏ ஆகியோர் உறுதியளித்தனர்.

The post புதைந்த நிலையில் காணப்பட்ட சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை நேரில் ஆய்வு செய்த எம்பி, எம்எல்ஏ உறுதி பெரணமல்லூர் அடுத்த ஆயிலவாடி ஏரி கரையில் appeared first on Dinakaran.

Related Stories: