ஒன்றியத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் மோடி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன..? வாஜ்பாயை போன்று செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றியத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் மோடி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து கூட்டணி தலைவர்களுடன் ஆலோசிக்காததால், வாஜ்பாயை போன்று மோடி செயல்படவில்லை என்று தலைவர்கள் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்திருந்தாலும், கடந்த இரண்டு தேர்தல்களை போன்று பெரும்பான்மை பலத்தை பெறவில்லை.

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றியத்தில் பாஜக கூட்டணி அரசு நீடிக்காது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கூறியிருந்தார். அதனால் பாஜக கூட்டணி அரசின் கடந்தகால வரலாறு குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளன. தற்போதைய மோடி ஆட்சியை, முந்தைய வாஜ்பாய் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். வாஜ்பாய் அரசானது பெரும்பான்மை பலத்துக்கு 90 இடங்களுக்கும் குறைவாக இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது.

கடந்த 1999ம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமரானபோது, ​​தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையில் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்று கூடி, பொது செயல் திட்டத்தை உருவாக்கின. அப்போது பாஜகவின் முக்கிய செயல்திட்ட பட்டியலில் இருந்த ராமர் கோயில் விவகாரம், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவை குறித்து செயல்திட்டத்தில் கூறப்படவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆலோசனையின்படி வாஜ்பாய் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார். இம்முறை பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டணி அரசின் ​​குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன? என்பது தான் கேள்வியாக உள்ளது.

வாஜ்பாய் காலத்தில் இருந்த நிலைமை, தற்போதைய கூட்டணி ஆட்சியில் இல்லை என்று பாஜக மூத்த தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணி தலைவர்களும் கூறி வருகிறார்கள். அப்போது பாஜகவுக்கு 180 இடங்கள் கூட கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 240 இடங்கள் உள்ளது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், பெரும்பான்மை பலத்திற்கு 32 இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளது. அதனால் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதில் பாஜக தயக்கம் காட்டி வருகிறது. மேலும் பாஜகவின் செயல்திட்டத்தில் இருந்த ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோயில் கட்டுவது ஆகிய இரண்டையும் முந்தைய பெரும்பான்மை ஆட்சி காலத்தில் பாஜக செய்துவிட்டது. அதனால் தற்போது பெரிய அளவிலான இலக்கு திட்டம் பாஜகவிடம் இல்லை என்றே கூறுகின்றனர்.

எனவே பிரச்னைகளின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் முட்டுக்கட்டை போட முடியாது. அதேநேரம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதை பாஜக ஆர்வம் காட்டுகிறது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான செயல்திட்டத்திற்கும் கூட்டணி கட்சிளை ஒருங்கிணைத்து விடலாம் என்றே பாஜக நம்புகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது பாஜகவுக்கு பெரிய சவாலாக இல்லை. இம்முறை கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் பெரிய கோரிக்கை ஒன்றும் இல்லை.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதேபோல் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், பீகாருக்கு கூடுதல் நிதியுதவி ஒதுக்க வேண்டும் என்ற ேகாரிக்கையை விடுத்துள்ளார். இந்த தலைவர்கள் மட்டுமின்றி, பிற கூட்டணி தலைவர்களும் பெரிதாகக் கோரிக்கையை எதுவும் எழுப்பவில்லை. எனவே வாஜ்பாய் காலத்திற்கும், மோடியின் காலத்திற்கும் இடையே இருக்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால், வாஜ்பாய் அரசானது நிர்ப்பந்தங்கள் மற்றும் சமரசங்களுக்கு கட்டுப்பட்டது. ஆனால் தற்போதைய மோடி அரசானது வலுவானதாகவும் நிலையானதாகவும் இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் முடிந்த நிலையில், பாஜக கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன? என்பது கேள்வியாக உள்ளது. இவ்விசயத்தில் வாஜ்பாயை போன்று மோடி செயல்படவில்லை என்றே பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

The post ஒன்றியத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் மோடி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன..? வாஜ்பாயை போன்று செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: