திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு புகார்கள் சென்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது அங்கிருந்த சில மாணவிகள் 2 ஆசிரியர்கள் மாணவிகளை தவறாக பார்ப்பதும், கை வைத்து தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் அறிக்கை பெறப்பட்டது.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை கல்வித் துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2 ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வித் துறையினர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் – ஆவடி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் மாணவிகளும், மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
போராட்டத்தின்போது, 2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் – ஆவடி சாலையில் செவ்வாப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், வட்டாட்சியர் செ.வாசுதேவன் உள்பட அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவிகள் அதற்கு உடன்படாமல் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து 2 ஆசிரியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பாக காணப்பட்டது
இதனையடுத்து கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், இணை ஆணையர் ஐமன் ஜமால், உதவி ஆணையர்கள் தனச்செல்வன், அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவிகள் காவல்துறையினரின் உத்தரவாதத்தை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றனர். இதனால் 5 மணி நேர சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. அனைத்து மாணவிகள் சார்பில் காவல்துறைக்கும் கலெக்டருக்கும் புகார் மனு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்தனர்.
The post போக்சோவில் கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை விடுதலை செய்யக்கோரி மாணவிகள் சாலை மறியல்: 5 மணி நேர போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.